முதல்வரின் நாகை, திருவாரூர் பயணம் திடீர் ரத்து; மோசமான வானிலையா? இல்லை மோசமான சூழ்நிலையா?

 

முதல்வரின் நாகை, திருவாரூர் பயணம் திடீர் ரத்து; மோசமான வானிலையா? இல்லை மோசமான சூழ்நிலையா?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இதனால் அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். உணவுக்கு வழியில்லாமல் பனங்குருத்து கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அரசு தரப்பில் இருந்தும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என அரசு தரப்பு கூறுகிறது.

ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை முறையாக எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள் கூறி போராடி வருகின்றனர். மேலும் அவர்களை சந்திக்க செல்லும் அமைச்சர்களிடமும் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நாகையில் கஜா கரையை கடந்ததால் அந்த மாவட்டத்தின் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளன. 

அங்கு முறையான நிவாரண பணி வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் நாகை மாவட்டத்தின் தலைஞாயிறு பகுதி நிவாரண முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அர்சி புழுத்து போயிருந்த புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

arisi

இதனால் அங்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை அடித்தும், பைக்கில் தப்பி சென்ற அவரை துரத்தி பிடித்தும் வாக்குவாதத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே முதல்வர் பழனிசாமி நேற்று வரை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடாமல் இருந்தார். அமைச்சர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பே அவரின் இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

இதனையடுத்து முதல்வர் பழனிசாமி இன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

epss

இந்நிலையில், இந்த இரு மாவட்டங்களையும் முடித்த முதல்வர் நாகைக்கும், திருவாரூருக்கும் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த முடிவு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. மேலும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர். அவர்களும் மோசமான வானிலையில்தான் இயங்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் முதல்வரோ வானிலையை காரணம் காட்டி நாகை, திருவாரூர் மாவட்டங்களை புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பலர் கூறி வருகின்றனர்.

pala

ஒரு மாநிலத்தின் 4 மாவட்டங்கள் புயலால் உருக்குலைந்து போயுள்ளன அந்த மாவட்டங்களுக்கு செல்வதைவிடவும் முதல்வருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வரின் இந்த முடிவு நாகை, திருவாரூர் மாவட்ட மக்களை கொந்தளிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இனி அவர் அங்கு போனால் அவருக்கு எதிராக நிச்சயம் வீரியமான போராட்டம் நடைபெறும் என தெரிகிறது.

மேலும், முதல்வர் பழனிசாமி நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாததற்கு காரணம் மோசமான வானிலை இல்லை அங்கு மக்கள் முதல்வர் மேல் கொதிப்பில் இருக்கிறார்கள். அதனால் அமைச்சர்களின் அறிவுரைப்படி இப்போதைக்கு நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் முடிவெடுத்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு முதல்வர் செல்லாததற்கு காரணம் மோசமான வானிலை இல்லை மோசமான சூழ்நிலைதான் காரணம் என அவர்கள் அடித்து கூறுகிறார்கள்.