யூடியூப் இணையதளத்தில் டிஸ்லைக் பெற்றதில் புதிய சாதனை…எந்த வீடியோ தெரியுமா?

 

யூடியூப் இணையதளத்தில் டிஸ்லைக் பெற்றதில் புதிய சாதனை…எந்த வீடியோ தெரியுமா?

யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாகி உள்ளது.

கலிபோர்னியா: யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாகி உள்ளது.

யூடியூப் இணையதளத்தில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘யூடியூப் ரீவைன்ட் 2018’ என்ற வீடியோ யூடியூப் ஸ்பாட்லைட் என்ற சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது ஓர் சாதனையை படைத்துள்ளது. அதாவது யூடியூப் வரலாற்றிலேயே இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாகி இருக்கிறது.

இதுவரை சுமார் 14 கோடி பேர் பார்த்துள்ள யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோவினை 23 லட்சம் பேர் லைக் செய்துள்ள நிலையில், சுமார் 1 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்துள்ளனர். முன்னதாக யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ இருந்தது.

யூடியூப் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு வீடியோவே அதிக டிஸ்லைக் பெற்று இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ரெடிட் பயன்படுத்துவோர், யூடியூப் ரீவைன்ட் வீடியோ பற்றி மீம்களை பதிவேற்றம் செய்து இதனை டிஸ்லைக் செய்யக் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யூடியூப் வெளியிட்டதிலேயே மிகவும் மோசமான வருடாந்திர வீடியோவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் மீது பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்துடன் வீடியோவின் தீம் அதிகளவு செயற்கையாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். யூடியூபில் பிரபலங்களாக பார்க்கப்படும் மார்கியூஸ் பிரவுன்லீ, டெக்னிக்கல் குருஜி மற்றும் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வீடியோவின் துவக்கத்தில் தோன்றுகின்றனர். அந்த வகையில் வீடியோவில் மேலும் சில பிரபலங்கள் இடம்பெறவில்லை என பலர் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ அதிக டிஸ்லைக் பெற்றிருக்கும் நிலையில் அதன் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறது. ஒற்றை வரியில் பதிவிடப்பட்டு இருக்கும் அந்த ட்விட்டில் ‘யூடியூபில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது’ என நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.