"கார்களில் 6 ஏர் பேக் கட்டாயம்... இல்லாவிட்டால் நடவடிக்கை" - மத்திய அரசு அதிரடி!

 
கார் ஏர்பேக்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, மத்திய மோட்டார் வாகன விதிகளில் (1989) திருத்தம் செய்ய வரைவு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரைவுச் சட்டத்தில், ''2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பின் தயாரிக்கப்படும் 8 பயணிகளை (எம்-1) கொண்ட கார்களில் ஓட்டுநர், பக்கவாட்டில் அமர்ந்திருப்போர், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகளை பொருத்துவது கட்டாயம். ஒவ்வொரு ஏர் பேக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கையை மூடும் வகையில் இருக்க வேண்டும். 

Front airbags to be mandatory in passenger vehicles from April 1

பின்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு பக்கவாட்டிலும், ஓட்டுநர், ஓட்டுநர் அருகே முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கு டேஷ் போர்டிலிருந்தும் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். விபத்துக் காலங்களில் ஓட்டுநர் மற்றும் மோதும் வாகனங்களிடையே பெருத்த சேதத்தைத் தவிர்த்து உயிரிழப்பையும், தீவிர காயத்தையும் தடுக்கும் நோக்கில் இப்பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில், “முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணி, ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் ஏர் பேக் கட்டாயம் காரில் பொருத்தப்பட வேண்டும்.


இதில் ஓட்டுருக்கு மட்டும் கட்டாயம் என 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கும் ஏர் பேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 8 பயணிகள் செல்லும் கார்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 6 ஏர் பேக் கட்டாயமாக்க வரைவு சட்ட மசோதா வெளியிடப்பட்டுள்ளது” என்றார். 2020ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 496 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 47 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர். கூடுதல் ஏர் பேக் வைக்கும்போது ஒவ்வொரு ஏர் பேக்கிற்கும் தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் கூடுதலாக காரின் விலை ஏறும்.