"ஸ்விட்ச்சை தட்டினால் கலர் மாறும் கார்"... அசத்திய பிஎம்டபிள்யூ - "இனி போலீஸுக்கு தான் தலைவலி"

 
BMW கார்

ஆட்டோமொபைல் துறையில் நீண்ட நெடுங்காலமாக கோலோச்சி வருவது பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் தான். ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் பல்வேறு உலக நாடுகளுக்கு கார் சப்ளே செய்கிறது. எப்போதுமே இந்தக் காருக்கென தனி மவுசு இருக்கும். ஆடம்பரமான, அதிநவீன தொழில்நுட்பங்கள் என வாடிக்கையாளர்களை என்றுமே பிஎம்டபிள்யூவின் கார்கள் ஏமாற்றியதில்லை. அதனால் தான் இன்றளவும் பல்வேறு போட்டியாளர்கள் சந்தையில் களமிறங்கினாலும் அதன் இடத்தை எதனாலும் பிடிக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.

காலங்கள் மாற மாற மக்களும் ரசனைகளும் மாறும். அதை சரியாக கண்டுணர்ந்து அவர்களின் ரசனைக்கேற்ப கார்களில் புதுமைகளைப் புகுத்துவதில் பிஎம்டபிள்யூ நிறுவனம் என்றுமே கில்லாடி தான். அந்த வகையில் தற்போது நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் மின்னணு கண்காட்சியில் தான் பிஎம்டபிள்யூ நிறமாறக் கூடிய மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காருக்கு BMW iX Flow எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 


மின்னணு மை தொழில்நுட்பத்தை (electronic ink) பயன்படுத்தி iX கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரின் வெளிப்புறத்தை சாம்பல் மற்றும் வெள்ளை வடிவங்களில் மாற்றுவதற்கு உதவுகிறது. காரின் நிறத்தை செயலிகள் மூலம் நாம் மாற்றியமைக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் கண்காட்சிக்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்போது விற்பனைக்கு வரும் என அவர்கள் கேட்டதிற்கு பிஎம்டபிள்யூ தரப்பு சஸ்பென்ஸாக வைத்துக் கொண்டது. எப்போது விற்பனைக்கு வரும், காரின் விலை எவ்வளவு போன்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.


2021ஆம் ஆண்டே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் காரின் நிறத்தை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக BMW கூறியிருந்தது. அதோடு நில்லாமல் அதனை செய்தும் காட்டி சாதித்துள்ளது அந்நிறுவனம். இந்தக் காரின் நிறமாறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். அதில் சுவாரசியமானது எதுவென்றால், இனி காவல் துறையினருக்கு தான் தலைவலி; குற்றங்கள் செய்பவர்கள் இந்தக் காரில் எஸ்கேப் ஆனால் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது என ஜாலியாக கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.