புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 4-ம் இடம்!

 

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு 4-ம் இடம்!

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. அதேபோல கொரோனாவுக்கு அதிக பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம்.

ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து தற்போது 2.13 இலட்சமாக (2,13,027) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.03 சதவீதமாகும். 

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து 20,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,590 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,975 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,01,62,738 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தைக் கடந்துள்ளது (99,49,711). குணமடைந்தவர்களின் வீதம் 96.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 81.15 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4,337 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

77.56 சதவீத புதிய தொற்றுக்கள் 7 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. கேரளாவில் 5,490 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்கள் அடிப்படையில் தினசரி கொரோனா அப்டேட் செய்யப்படும் வரிசையில் புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 4–ம் இடத்தையும், நோயாளிகள் குணமடைவதில் 4–ம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் நாளை (ஜனவரி 16-ம் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பூசி பல மாவட்டங்களுக்கு அனுப்பட்டுள்ளன. எனவே, அதன்பின் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பது இன்னும் குறையக்கூடும் என நம்பப் படுகிறது.