ஓடாத பஸ்சுக்கு வரி, அபராதம் விதித்த தமிழக அரசு! – வேதனையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்

 

ஓடாத பஸ்சுக்கு வரி, அபராதம் விதித்த தமிழக அரசு! – வேதனையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்

ஊரடங்கு காலத்தில் இயங்காத ஆம்னி பஸ்களுக்கு வரி மற்றும் அபராதம் கட்டச் சொல்லி தமிழக அரசு நிர்பந்தித்து வருவதாகவும் தமிழக அரசு ஆம்னி பஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

ஓடாத பஸ்சுக்கு வரி, அபராதம் விதித்த தமிழக அரசு! – வேதனையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னி பேருந்து தொழில் ஏற்கெனவே பல காரணங்களால் நலிவடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மேலும் நலிவடைந்து, அதை சார்ந்த இரண்டு லட்சம் பேரும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், பேருந்துகளை இயக்காத காலகட்டமான (ஏப்ரல்-மே-ஜூன்) மாதங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு சாலை வரி, ஒரு பேருந்துக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலுத்த அரசு நிர்ப்பந்திக்கின்றது. பலமுறை அரசை சந்தித்து காலாண்டு வரிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் உயர் நீதிமன்றத்தை நாடி கோரிக்கை வைத்தோம். இந்த வழக்கிலும் பலமுறை அரசு சார்பாக கால அவகாசம் கேட்கப்பட்டது. கடைசியாக ஜூன் மாதம் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்றும் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதி வழக்கை ஜூலை 6ம் தேதி மறுவிசாரணை வரும் என்று கூறினார். அதுவரை அரசு சார்பில் எந்தவித அபராதமோ நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறினார்கள். ஆனால், அரசு அதையும் மீறி ஒரு ஆம்னி பேருந்துக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் காலாண்டு சாலை வரிக்கு 100 விழுக்காடு அபராத கட்டணத்துடன் சேர்த்து, 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கட்டும்படி ஆன்லைனில் மாற்றிவிட்டார்கள். தற்போது தாங்கள் உள்ள சூழ்நிலையில் சாலையில் இயங்காத பேருந்துகளுக்கு சாலை வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம். ஆகையால், எங்கள் தொழிலைச் சார்ந்த இரண்டு லட்சம் பேர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தையும் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்.

ஓடாத பஸ்சுக்கு வரி, அபராதம் விதித்த தமிழக அரசு! – வேதனையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 6 மாதங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும். பேருந்துகளுக்கான இன்ஸ்யூரன்ஸ் ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். வங்கிகளுக்கு 6 மாதகாலம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையில் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
டீசல் விலை உயர்வு மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை 11.93 ரூபாய் உயர்ந்து உள்ளது. இந்த உயர்வையும் தள்ளுபடி செய்யவேண்டும். சுங்கச்சாவடி ஆறு மாத காலம் வசூலிக்காமல் விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களையும் எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றும்படி அரசுக்குப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.