அல்சைமர் நோய்… அறிகுறிகள் அறிவோம்!

 

அல்சைமர் நோய்… அறிகுறிகள் அறிவோம்!

அல்சைமர் என்பது மூளை சுருக்கம் அடைவதால் அல்லது மூளை செல்கள் உயிரிழப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்பு ஆகும். இதன் காரணமாக நினைவு திறன் குறைவு, அறிவாற்றல் திறன் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட 60 முதல் 80 சதவிகிதம் அல்சைமரே காரணமாக இருக்கிறது.

பொதுவாக அல்சைமர் என்பது 65 வயதைக் கடந்தவர்களுக்கு வரக்கூடிய நோய் என்றும், வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் கருதுகின்றனர். 65 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கூட அல்சைமர் நோய் ஏற்படலாம்.

அல்சைமர் நோய்… அறிகுறிகள் அறிவோம்!

அறிகுறிகள்

நினைவாற்றல் குறைவதே இதன் முக்கிய அறிகுறி. மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைக் கூட நினைவுபடுத்த முடியாமல் தவிப்பதன் இதன் ஆரம்பக்கட்ட அறிகுறியாக உள்ளது.

இந்த நிலையில் நோய் கண்டறியப்பட்டால் அன்றாட செயல்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது, குடும்பத்தினர், நண்பர்கள் ஒத்துழைப்போடு பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

அல்சைமர் பாதிப்பு தொடர்ந்துகொண்டே சென்றால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நினைவு திறன் குறைதல்

இவர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய விஷயங்கள் கூட மறந்து போகும்.

தொடர்ந்து கேட்ட கேள்வியையே அல்லது சொன்ன பதிலையே சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

மற்றவர்களுடன் பேசியது, வருவதாக ஒப்புக்கொண்டது, நிகழ்வுகள் என அனைத்தையும் மறந்துவிடுவார்கள். அது மீண்டும் அவர்கள் நினைவுக்கு வரவே வராது.

வழக்கமான சென்று வரும் இடங்கள், வழிகள் கூட மறந்து எப்படி வீடு திரும்புவது என்று தெரியாமல் திணறுவது.

அடிக்கடி சென்று வந்த வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களைக் கூட மறந்து போவது.

குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பெயரைக் கூட மறப்பது.

அல்சைமர் நோய் வந்தால் ஒருவரின் சிந்திக்கும் திறன், காரணம் அறிதல் திறன் குறைந்துவிடும்.

தொலைபேசி எண் உள்ளிட்ட எல்லா எண்களும் மறந்துவிடும். எண்கள் தொடர்பான தேதி, வங்கி விகாரம், பண விவகாரம் எதுவும் இவர்களுக்கு நினைவில் இருக்காது.

முடிவெடுக்கும் திறன் மங்கிவிடும். வெளியே சுட்டெரிக்கும் வெயில் அல்லது மழை பெய்கிறது. குடை எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்று கூட முடிவெடுக்க முடியாது இவர்களால். உணவு சமைக்கும்போது அடுப்பை அணைக்க வேண்டுமா அப்படியே எரிய விடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் ஏதோ சிந்தனையில் இருப்பார்கள்.

நீண்ட நாள் நினைவில் இருக்கும் விஷயங்கள் கூட மறந்துவிடும். உதாரணத்துக்குப் படிப்பது, வாசிப்பது, பாடல் கேட்பது, எதை சொல்வது, பாடுவது, நடனம் என அனைத்து திறமைகளும் மறந்துவிடும்.

எனவே, ஆரம்பநிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது!