குளிர்பானம் பிரியரா… அது உங்கள் உடலை என்ன எல்லாம் செய்யும் என்று தெரியுமா?

 

குளிர்பானம் பிரியரா… அது உங்கள் உடலை என்ன எல்லாம் செய்யும் என்று தெரியுமா?

சிலர் குளிர்பானங்களை விரும்பிக் குடிப்பது உண்டு. பிரஷ் ஷூஸ் குடிக்க வாய்ப்பு இருந்தும் கூட, ஸ்டைலுக்காக சர்க்கரை அளவு அதிகம் உள்ள கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிப்பார்கள். காலை, மதியம், சாப்பிடும்போது, சாப்பிட்ட பிறகு என்று எப்போதும் கார்பனேட்டட் டிரிங்க்ஸ் பக்கத்தில் வைத்திருப்பார்கள். இப்படி கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்துவது உடலில் என்ன பிரச்னைகள் ஏற்படுத்தும் என்று தெரியுமா?

குளிர்பானம் பிரியரா… அது உங்கள் உடலை என்ன எல்லாம் செய்யும் என்று தெரியுமா?

குளிர்பானத்தில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. சர்க்கரை ஃபிரக்டோஸ், குளுக்கோஸ் என இரண்டு வகை உள்ளது. குளுக்கோஸ் நம்முடைய உடலில் உள்ள செல்களால் பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை ஃபிரக்டோஸ் வகையைச் சார்ந்ததாக இருக்கிறது. அது கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்படுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகரித்து ஃபேட்டி லிவர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

அதிகப்படியான சர்க்கரை அளவு பல்லின் எனாமலை பாதிக்கிறது. மேலும் வாயில் சர்க்கரைச் சத்து இருப்பதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கிறது. இதன் காரணமாக சொத்தைப் பல் உள்ளிட்ட பல பிரச்னைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கொழுப்பாக மாற்றப்படும் சர்க்கரை நம்முடைய வயிற்றுப் பகுதியிலும் சேர்கிறது. இதனால் தொப்பை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான வயிற்றுப் பகுதி கொழுப்பு டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் செயல்திறனைக் குறைக்கும் மற்றொரு கெடுதலையும் செய்கிறது. அதிக அளவில் சோடா டைப் குளிர்பானங்களை குடிப்பது இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் நிலையை ஏற்படுத்துகிறது. இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அடுத்து சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.

அதிக அளவில் சர்க்கரை அளவு அதிகரிப்பது கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. டிரை கிளசரைட், எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது அது இதய ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.

அதிகப்படியாக குளிர்பானங்கள் குடிப்பது கணைய புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு என்டோமெட்ரியல் எனப்படும் கர்ப்பப்பையின் உட்புற சுவரில் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர். எனவே, குளிர்பானங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது!