கடமலை மயிலை பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்- அச்சத்தில் பொதுமக்கள்

 

கடமலை மயிலை பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்- அச்சத்தில் பொதுமக்கள்

தேனி

தேனி மாவட்டம் கடமலை மயிலை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை மயிலை மற்றும் அதன் அருகாமையில் உள்ள வருசநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, கண்டமனூர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.

கடமலை மயிலை பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்- அச்சத்தில் பொதுமக்கள்

மேலும், இரவு நேரங்களில் துரத்தும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், இறைச்சி கடைகளின் முன்பு அவை கூட்டம் கூட்டமாக திரண்டு நிற்பதால், வாடிக்கையாளர்கள் அச்சத்துடன் இறைச்சியை வாங்கி செல்கின்றனர். மேலும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், போதிய நிதி இல்லை என்று கூறி அவர்கள் கைவிரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வருசநாடு வேல்முருகன், கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து தெருக்களிலும் இரவு, பகலாக தெருநாய்கள் தொல்லை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தெருநாய்களால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்