ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

 

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

ஆடி மாதத்தின் பெருமைகளில் ஒன்று இம்மாதத்தில் தான் ஆண்டாள் அவதரித்தது. திருமால் மீது பக்திபூண்டு அவனது அருமை பெருமைகளை பாடிப்பரவி பன்னிரு ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வாராக திகழ்பவர் ஆண்டாள்.

வைஷ்ணவம் போற்றும் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை 30 பாசுரங்களுடன் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் என மொத்தம் 173 பாசுரங்கள் ஆண்டாளால் திருமால் மீது கொண்ட பக்தியால் பாடப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் தெள்ளு தமிழ் தேனமுது. கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்பார் கண்ணதாசன். கோதையின் சொற்கள்’ அமுதனைய சொற்கள்’ என புகழ்வார் பாரதியார்.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்”

என ஆண்டாள் தம் திருமாலை திருமணம் செய்வதாக கண்ட கனவை தோழி கூறுவதாய் பத்துப் பாசுரங்களில் அழகுற பாடுவார் ஆண்டாள்.

ஏழாம் நூற்றாண்டில் ஆடிமாத வளர்பிறையில் பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் என்ற போற்றப்பட்ட விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனத்தில் துளசி செடியின். கண்டெடுக்கப்பட்ட தெய்வீக பெண்குழந்தை அவள்.

மாசற்ற துளசிசெடியின் கீழ் கிடந்து எடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்தார் பெரியாழ்வார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள் கோதை.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ என பெயர் பெற்றாள் .

ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த போது, அவள் ” நான் மானுடன் யாரையும் மணக்க மாட்டேன் மணந்தால் அந்த கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதியாக கூறினாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

அதன்படி மேளதாளம் முழங்க மகள் ஆண்டாளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறஞ் செய்யும் கொலோ! ‘
– என்ற பெரியாழ்வார் திருமொழியின் 300 வது பாசுரம் ஆண்டாள் திருமாலை மணந்த பெருமையை சொல்கிறது.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!
ஆண்டாள் என்றதும் முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் பாசுரங்கள் திருமலை போற்றவதோடு தமிழுக்கும் பெருமை சேர்ப்பன ஆகும்.

ஆண்டாள்.அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார் என்ற திருநாமம் பூண்ட திருமாலோடு நாச்சியாராக இருந்து அருள்பாலிக்கிறார்.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்… ஸ்ரீரங்கரை நினைத்து உருகி பாடிய திருப்பாவை!

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் 90வது தேசம். சுயம்பு மூர்த்தியான மூலவர் ரங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வர் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஒரே கருவறையில் திருக்காட்சியளிக்கும் ஒரே ஆலயமும் இது . பள்ளிகொண்ட ரங்கநாதரின் அற்புதக் காட்சியை, கருவறையின் கீழ் அமைந்திருக்கும், மர வேலைப்பாடுகளால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அறையில் தரிசிக்கலாம். வைணவ திவ்ய தேசங்கள் 108 – ல் ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடு என்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் பிறந்த வீடு ஆகும். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர திருவிழா எல்லா வைஷ்ணத்தலங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்றாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருக்கல்யாணம் தேரோட்டம் என மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது . ஆனால் கொரானா ஊரங்கால் எல்லா கோயில்களும் போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவும் இணையத்தளத்தில் தொலைக்காட்சி நேரலையில் தான் காண கிடைக்கும் போலிருக்கிறது.

-மு.ரா.சுந்தரமூர்த்தி