கோமதி மாரிமுத்து, சாந்தி.. : திருந்தாத  உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?

 

கோமதி மாரிமுத்து, சாந்தி.. : திருந்தாத  உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?

தோஹாவில் நடந்துகொண்டிருக்கும் 23-வது ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளார், கோமதி. 800 மீட்டரை 2:02.70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

சிறப்புக்கட்டுரை:
பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு

தோஹாவில் நடந்துகொண்டிருக்கும் 23-வது ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளார், கோமதி. 800 மீட்டரை 2:02.70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

gomathi marimuthu
 
அவரை பாராட்டு மழையில் நனைத்து வருகிறோம்.  “அரசின் முறையான உதவி கிடைக்காமல் சொந்த முயற்சியில் நாட்டுக்கு தங்கம் பெற்றுத்தந்தவர்” என்று ஆளாளுக்கு புகழ்கிறோம். `வறுமையை உடைத்த தமிழ்ப்பெண்’,  “தன்னம்பிக்கையின் தனி அடையாளம்” என்றெல்லாம் முகநூலில் பெருமிதத்துடன் பதிவிடுகிறோம். அரசு, கட்சிகள், தனியார் அமைப்புகள், தனி நபர்கள் என்று ஆளாளுக்கு லட்சம் லட்சமாக பரிசுகளை அளித்து வருகிறார்கள்.
 
கடந்த இரு நாட்களாக  சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராய் கலந்துகொண்டிருக்கிறார் கோமதி. இன்று சொந்த ஊரான முடிகண்டம்  வருவதற்காக திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய கோமதிக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,  பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  
 
எல்லாம் மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால் தனது தனிப்பட்ட முயற்சியில் இந்தப் பதக்கத்தை கோமதி பெற்று வந்துள்ளார். அதற்கு முன் கோமதிக்கு உரிய உதவி கிடைத்ததா?
 
தங்கம் வென்று திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருச்சி மாவட்டத்தில் உள்ள என் சொந்த ஊரான முடிகண்டத்துக்கு சாலை வசதி இல்லை. அதனால் பேருந்து வசதியும் இல்லை. மின் வசதியும் இல்லை.

gomathi marimuthu
 
மிகுந்த வறுமையான குடும்பம்.  என் சுய முயற்சியிலேயே தடகள போட்டிகளில் கலந்துகொண்டு வந்தேன். தோஹாவில் நடந்த போட்டிக்குக் கூட என் சொந்த செலவிலேயே விமானத்தில் சென்று, தோஹாவில் தங்கி கலந்துகொண்டேன்” என்றார். குறிப்பாக, “போட்டியின் போது அணிந்துகொள்ள தரமான ஷுகூட இல்லை. கிழிந்த ஷூவை அணிந்துகொண்டுதான் ஓடினேன்” என்றார்.
இப்போது அவர் தங்கம் வென்று வந்த பிறகு, ஆளாளுக்கு லட்சங்களில் பரிசு அளிக்கிறார்கள்.இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெறுமை சேர்த்த தமிழகப் பெண்ணுக்கு பரிசு அளிப்பது என்ன தவறு என்று தோன்றலாம்.
 
மிகுந்த மன உளைச்சலுடன் சொந்தப் பணத்தில் தோஹா சென்று புது ஷூ கூட அணியாமல் ஓடினாரே… அதற்கு முன்பே அவருக்கு உதவியிருக்க வேண்டும் அல்லவா?
 
கோமதி வருமானவரித்துறையில் பணியாற்றுபவர். தோஹா செல்லும் முன்பு, அரசு மற்றும் தனியார்களிடம் உதவி கேட்கத் தெரியாதவர் அல்ல. பல கதவுகளைத் தட்டியிருப்பார். ஆனால் திறக்கவில்லை என்பதுதானே உண்மை?!
 
மற்றவர்களை விடுங்கள்.. தமிழக அரசுக்கு கோமதியின் நிலை தெரியாதா? மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி என்று உண்டே! அவருக்கு கோமதி, சொந்த செலவில் தட்டுத்தடுமாறி பணம் சேர்த்துத்தான் தோஹா செல்கிறார் என்பது தெரியாதா?
 
தெரிந்தும் அரசு உதவவில்லை என்றால் அயோக்கியத்தனம். தெரியவே இல்லை என்றால் அரசு நடத்த லாயக்கே இல்லை என்று அர்த்தம்!
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர்  ஜெயக்குமார், விளையாட்டு துறைக்கு எப்போவுமே அம்மாவின் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் இருப்பதால்  கோமதிக்கு உதவி செய்ய இயலவில்லை!” என்கிறார். இப்போது தேர்தல் விதி முறை இருக்கிறது. சரி, இதற்கு முன் உதவி செய்ய  அரசுக்கு என்ன தடை?ஆளும் கட்சி இப்படி என்றால், ஆண்ட கட்சியான தி.மு.க.வின் நிலை என்ன? கோமதிக்கு பத்து லட்ச ரூபாய் பரிசு அளித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். நல்ல விசயம்தான்.ஆனால் ஏற்கெனவே கோமதிக்கு அல்லது அவர் போன்று தகுந்த உதவி இன்றி தவிப்பவருக்கு தி.மு.க. ஆண்டபோது செய்தது என்ன? 

gomathi marimuthu
 
ஆட்சியில் இல்லாமலே போகட்டும். அ.தி.மு.க.வுக்கு இணையாக தமிழகம் முழுதும் தேர்தலுக்கு பணம் கொடுக்கும் வல்லமை உள்ள கட்சி தி.மு.கதான். கோமதி குறித்து அவரது ஊரில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் எவரும் முன்பு சொல்லவில்லையா?
 
கோமதி பதக்கம் பெறாமல் திரும்பியிருந்தால் அவர் பக்கம் ஆளும்   அரசோ, அல்லது கட்சிகளோ, அமைப்புகளோ திரும்பிப்பார்த்திருக்குமா? இப்போது, “கோமதி எங்கள் சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு வாழ்த்துகள்” என்று தங்கள் புகைப்படங்களையும் போட்டு சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள் சிலர். இவர்களுக்கெல்லாம் வெட்கமாக இருக்காதா? பதக்கம் பெறும் முன்பு கோமதி இவர்களது சாதி இல்லையா? சரி, அப்போது கோமதி இவர்களது சாதி என்பது தெரியாலே இருந்திருக்கலாம். ஆனால் தங்கள் சாதியைச் சேர்ந்த எத்தனை பேருக்கு, விளையாட்டில் உதவி செய்திருக்கின்றன சாதி அமைப்புகள்?
 
இதே கேள்விதான் இன்று கோமதிக்கு பரிசுகளை அள்ளிக்கொட்டும் கட்சிகள், அமைப்புகள், தனியார்கள் அனைவருக்கும்! இன்னொரு தடகள வீராங்கனையான சாந்தி என்பவரை நினைவிருக்கிறதா?
 
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். தையல்காரரான தந்தை சௌந்தராசனின் குறைந்த வருமானத்திலேயே குடும்பம் ஓடியது. சாந்திக்கு தடகள போட்டிகளில் ஆர்வம். ஆனால் சத்தான உணவோ, நல்ல ஷூக்களோ இல்லை.
 
ஆனாலும் மன உறுதியுடன் ஓட்டப் பயிற்சியை தொடர்ந்தார்.  2006ம் வருடம்  இதே கத்தார் நாட்டின் தலைநகரமான தோகாவில் நடைபெற்ற  ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு  வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார்.
 
ஆனால் அந்தக் காட்சியை அவரது குடும்பத்தினர் தொலைக்காட்சியில் காண முடியவில்லை. காரணம் அவர்களது வீட்டில் தொலைக்காட்சியே இல்லை. சாந்தி வெற்றி பெற்று வந்த பிறகு, அப்போதைய முதல்வர் கருணாநிதி தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை அவருக்கு பரிசளித்தார். தற்போது நாம் அ.தி.மு.க. அரசிடம் நாம் எழுப்பும் கேள்வி, அப்போதைய தி.மு.க. அரசுக்கும் பொருந்தும்.

santhi
 
மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு தடகள வீராங்கனை சாந்தி பற்றி முன்பே தெரியாதா? ஏனென்றால், ஏற்கெனவே சர்வதேச அளவில் பத்து பதக்கங்களையும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றவர் சாந்தி. ஆனாலும் அவரது வறுமை விலகவில்லை.
சரி, தோஹாவில் வென்ற பிறகாவது அவரது நிலை மாறியதா? இல்லை. இத்தனை பதக்கங்கள் பெற்ற பிறகும் செங்கல் சூளையில் வேலை செய்ய போய்விட்டார் சாந்தி. காரணம் வறுமை.
 
பிறகு, பெரும் சட்டப்போராட்டம் நடத்தி அரசுப்பணி பெற்றார்.
 
தற்போது தோஹா போட்டியில் தங்கம் வென்ற கோமதி, திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியபோது பெரும் மக்கள் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒருவராக சாந்தி நின்றுகொண்டிருந்தார். 
 
இத்தனைக்கும், தனது ரோல் மாடல் என்று சாந்தியைத்தான் கூறியிருந்தார் கோமதி. ஆனால் கூட்டத்தில் சிக்கி, கோமதியைச் சந்திக்க இயலாமல் தவித்தார் சாந்தி.  பிறகு யாரோ அடையாளம் கண்டு கோமதியைச் சந்திக்க வைத்திருக்கின்றனர்.
 
விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களை கண்டுகொள்ளாமல் தவிக்க விடுவது. அவர்கள் சொந்த முயற்சியில் வென்று பதக்கம் வாங்கிவிட்டால் கொண்டாடுவது. பிறகு மீண்டும் மறந்துவிடுவது.
 
அதாவது பதக்கம் பெற்றவர்களுடன் தங்களையும் இருத்தி தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்வே நம்மில் பெரும்பாலோரது இயல்பாக இருக்கிறது. இதற்காக வெட்கப்பட வேண்டும்.
 
உண்மையிலேயே இந்தியர் என்றோ, தமிழர் என்றோ உணர்ந்தால்… நமது நாடு அல்லது மாநிலம் விளையாட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்று விரும்பினால்.. அவரவர் பகுதியில் உதவியின்றி தவிக்கும் வீரர்- வீராங்கனைக்கு உதவ வேண்டும்.
 
வெல்வதற்கு முன்பே கோமதிகளை கொண்டாட வேண்ட வேண்டும்!