உலகக்கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

 
இந்தியா

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் முதல் அரைஇறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை மைதானத்தைப் பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இந்திய அணியும் பேட்டிங்கையே தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிரென்ட் போல்டை ஆரம்பம் முதலே அடித்து ஆடினார் ரோஹித் சர்மா.29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதன் பிறகு கில் மற்றும் விராத் கோலி ஜோடி சேர்ந்து  சிறப்பாக ஆடினர்.நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறப்பாக ஆடிய கில் 79 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது சுளுக்கு ஏற்பட்டு ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கோலியுடன் ஜோடி  சேர்ந்து சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடிய கோலி சதம் அடித்து ஒருநாள் போட்டியில் 50வது சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பெற்றார். அபாரமாக ஆடிய கோலி 117 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 70 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இறுதி கட்டத்தில் கே.எல் ராகுல் 39 ரன்கள் குவித்தார்.50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது.

இந்தியா

398 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் துவக்க‌ ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ராச்சின் ரவீந்திர தலா 13 ரன்கள் எடுத்து சமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். இதன்பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரி மிச்சல் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். ஆட்டத்தின் 29வது ஓவரில் கேன் வில்லியம்சனின் எளிதான கேட்ச்சை சமி தவறவிட்டார். மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த டேரி மிச்சல் சதம் அடித்தார்.181 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்த கூட்டணியை ஒருவழியாக சமி உடைத்தார். கேன் வில்லியம்சனை 69 ரன்னிலும்,அடுத்து வந்த லாதமை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க செய்து மீண்டும் அசத்தினார் சமி. அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய பிலிப்ஸை 41 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் பும்ரா. தனி ஒரு ஆளாக போராடிய டேரி மிச்சம் 134 ரன்களில் ஆட்டம் இழந்தார்.


50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அபாரமாக பந்து வீசிய சமி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.2019 ஆண்டு அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி இதே நியூசிலாந்திடம் தோற்றது , அதற்குப் பதிலடியாக இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெளியேற்றியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி 2011 உலகக் கோப்பைக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். நாளை நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.