நெத்தியை தாக்கிய பந்து; ரத்த வெள்ளத்தில் சுருண்ட வீரர் - அறிமுக போட்டியிலேயே நேர்ந்த சோகம்!

 
Jeremy Solozano

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் 2014ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். அப்போது நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை ஹியூஸ் அடித்து ஆட முற்பட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அவருடைய இடது கழுத்துப் பகுதியை பந்து பலமாக தாக்கியது. நிலைகுலைந்த பில் ஹியூஸ் மைதானத்தில் சரிந்தார். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு சிகிச்சையளித்தும் பயனில்லாமல் போனது.

Image

அவர் மரணத்தைத் தழுவினார். ஹியூஸின் மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மனதையும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் உலுக்கிவிட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கதறி அழுதனர். அதிலிருந்து பவுன்சர்களைக் கூட பார்த்து பார்த்து தான் பந்துவீச்சாளர்கள் வீசுகிறார்கள். இச்சம்பவம் நடந்ததிலிருந்து ஒருசில வீரர்களின் ஹெல்மெட்டை பந்து பதம் பார்த்தது பெரியளவில் காயம் இல்லை. ஆனால் இன்று நடந்திருப்பது கிட்டத்தட்ட ஹியூஸுக்கு நடந்தது போலவே நிகழ்ந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஜோடியான கேப்டன் கருணரத்னேவும், பதும் நிசங்காவும் பொறுமையாக விளையாடி வந்தனர். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஜெர்மி சோலோஜனோ என்பவர் களமிறங்கினர். முதல் போட்டியிலேயே இவருக்கு தான் அந்தப் பயங்கரம் நடந்திருக்கிறது. 24ஆவது ஓவரில் இவர் பேட்ஸ்மேனுக்கு அருகே ஹெல்மெட் அணிந்து பீல்டராக நிறுத்தப்பட்டிருந்தார்.


அப்போது சேஸ் வீசிய பந்தை கருணாரத்னே வேகமாக அடிக்க, சோலோஜனோ தலையைத் தாக்கியது. பந்து நெற்றிப்பொட்டில் அடித்ததால் மைதானத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். இதனால் மைதானத்தில் அனைவர் மத்தியிலும் பதற்றம் நிலவியது. இருப்பினும் உடனடியாக மைதான ஊழியர்கள் ஸ்ட்ரச்சரில் தூக்கிச் சென்று அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், கொண்டுவரப்பட்டது. சோலோஜனோ சுயநினைவுடனே இருந்தார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.