பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்? மும்பை-லக்னோ அணிகள் இன்று மோதல்

 
MIvsLSG

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் வருகிற மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது யார் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகளில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் வெளியேறியுள்ள நிலையில், மற்ற அணிகளுக்கான வாய்ப்பு நீடிக்கிறது. இந்த நிலையில், லக்னோவில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில், 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

இதேபோல் மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றல் அந்த அணி டாப் 2 இடங்களுக்கு முன்னேறிவிடும். இதேபோல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.