தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
Mar 1, 2025, 10:19 IST1740804579810

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு விளையாட செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில், இந்தியா விளையாடும் போட்டி மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தொடரை நடத்தும் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதேபோல் இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணிக்கு இந்த போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற முடியும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும். இதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலுடன் தொடரை நிறைவு செய்ய இங்கிலாந்து அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.