ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி- இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

 
ச்

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதின.

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் கூப்பர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு ஐசிசி தொடரில் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.இந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி ரன் குவித்த அவரை வருண் சக்கரவர்த்தி தனது இரண்டாவது பந்திலே வீழ்த்தி இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஹெட் 39 ரன்களிலும் மற்றும் லபுஷேன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.ஸ்மித் 73  ரன்னிலும் அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 49.3 அவர்களே 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சமி மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Image

265 என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. துவக்க ஆட்டக்காரர் கில் 8 ரன்னிலும்,கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய இந்த கூட்டணி 91 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்னிலும் அடுத்து வந்த அக்சர் படேல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி வந்த கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.48.5 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி 2023 உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பழிவாங்கும் வெற்றியாக ரசிகர்கள் கருதுகின்றனர். நாளை நடைபெறும் நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையான மற்றொரு அரைஇறுதியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும்.