பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க போவது யார்? கொல்கத்தா-ராஜஸ்தான் இன்று மோதல்

 
KKRvsRR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை 55 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி அணியை தவிற மற்ற அனைத்து அணிகளுக்குமே பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 5ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதேபோல் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.