பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி ?- கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 61வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.  

இதேபோல் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் சரண் அடைந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்த கொல்கத்தா அணி எஞ்சிய ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து ஆறுதல் அடைய முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.