பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று மோதல்

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லப்போகும் அணிகள் எது என்பது இதுவரை தெரியவில்லை. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த மூன்று இடத்திற்கு கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில்  7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். டெல்லி அணியை பொறுத்தவரையில் 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள டெல்லி அணி, கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும்.  ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இதில் 18-ல் சென்னையும், 10-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.