கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் - பதக்க பட்டியலில் தமிழகம் முதலிடம்

 
tamilnadu

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பதக்க பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ளது.


இந்த நிலையில்,  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பதக்க பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் 4 தங்கம், 2 வெண்கலம் உள்ளிட்ட 6 பதக்கங்களுடன் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக டெல்லி 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் 2வது இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.