இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அறிவிப்பு

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் இலங்கை அணி வெளியேறியுள்ளது.
ஆசிய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியால் கௌரவமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.ஒரு முறை 50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன், ஒரு டி20 உலகக்கோப்பை, 6 ஆசிய கோப்பைகள் வென்றுள்ள இலங்கை அணி இம்முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் மொத்தமாக கலைக்கப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் இலங்கை அரசின் தலையீடு உள்ளதால், இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சியாக செயல்படவில்லை என்று கூறி ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என்றும், இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இலங்கையை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.