இந்தியா - ஆஸி., கடைசி டெஸ்ட் போட்டி: நேரில் கண்டுகளித்த மோடி

 
modi

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், இந்திய பிரதமர் மோடி முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் கைகுலுக்கிய நிலையில், அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அகமதாபாத் மைதானமே அதிர்ந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நீக்கப்பட்டு முகமது சமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் குவாஜா ஆகியோர் களமிறங்கி நிதானமாக ஆடினர். நிதானமாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட்,அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்டு 31 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த மார்னஸ்  லபுசாக்னே 3 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார்.மறுபுறம் உஸ்மான் குவாஜா இந்திய பந்துவீச்சார்களை சிறப்பாக சமாளித்து அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வந்தார்.

கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களிலும் ஹான்ஸ்கோம்ப் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேறினார். பின்னர் வந்த கேமரூன் கிரீன்,உஸ்மான் குவாஜா உடன் ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் உஸ்மான் குவாஜா சதம் அடித்து அசத்தினார். இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் வலுவான நிலையில் உள்ளது.கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் உஸ்மான் குவாஜா 104 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.