இறுதிப் போட்டியில் விளையாட எம்.எஸ்.தோனிக்கு தடை? - ரசிகர்கள் அதிர்ச்சி

 
csk

ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படலாம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் தகுதி சுற்று போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நடுவரிடன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சம்பவம் தற்போது பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த போட்டியில் இம்பக்ட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார். இதனால் அதிருப்திக்குள்ளான டோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். இந்த விவாதம் முடிவதற்கே 8 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால்  பதிரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.