டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவத்தில் வீழ்ந்த லக்னோ

 
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவத்தில் வீழ்ந்த லக்னோ

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. 

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவத்தில் வீழ்ந்த லக்னோ

டாஸ் வென்ற  லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்காட்டக்காரர் டி காக் 2 ரன்களிலும் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஆமை வேகத்தில் ஆடிவந்த கேப்டன் கே.எல் ராகுல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.12 ஓவர்களில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய லக்னோ அணியை நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி கூட்டணி சிறப்பாக ஆடி கரை சேர்த்தனர். பதோனி 30 பந்துகளில் 55 ரன்களடனும் , பூரன் 26 பந்துகளில் 48 ரன்களடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே வாண வேடிக்கை காட்டியது. அந்த அணியின் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பந்துகளை சிக்ஸர்களாகவும் பவுண்டர்களாகவும் பறக்க விட்டனர். பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் அந்த அணி 107 ரன்களை திரட்டியது.ஹெட் 16 பந்துகளிலும் , அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் அரைசதத்தை கடந்தனர். 9.4 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்
டிராவிஸ் 30 பந்துகளில் 89 ரன்களுடனும் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தோல்வி அடைந்த லக்னோ அணி ஆறாவது இடத்தில் இருந்தாலும் தசம புள்ளிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.