சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை - பெண் உட்பட 22 பேர் கைது!

 
IPL Tickets

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக ஒரு பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் திணறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. இறுதியில் 18. 3ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 147ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான நேற்றையை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரூ. 62 ஆயிரம் ரொக்கம் மற்றும் 38 ஐபிஎல் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.