IPL 2025- அஸ்வினி குமாரின் அதிரடி பந்துவீச்சு... மும்பை அணி முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பையில் மோதின.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் தீவிரமான பந்துவீச்சை எதிர்க்க முடியாமல், கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். போல்ட், சாகர், மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணியில் ரகுவன்சி 26 ரன்கள், ரமந்தீப் சிங் 22 ரன்கள் சேர்த்தனர். 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, கொல்கத்தா அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய அஸ்வினி குமார் 4 விக்கெட்களையும், சாகர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
117 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ரிக்கல்டன் அரைசதம் அடித்து சிறப்பாக ஆடினார். ரோஹித் சர்மா மற்றும் வில் ஜாக்ஸ் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும், 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.