சேப்பாக்கத்தில் வீழ்ந்த சென்னை- 17 ஆண்டுகளுக்கு பின் பெங்களூரு சாதனை வெற்றி!

ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில், பெங்களூர் அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, இன்று வரை பெங்களூர் அணி சென்னை அணியை சேப்பாக்கத்தில் ஒருபோதும் தோற்கடிக்கவில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி, 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர், நிதானமாக விளையாடிய விராட் கோலி 31 ரன்களில் வெளியேறினார். அதேசமயம், கேப்டன் படிதர் அதிரடியாக ஆடி, 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில், மூன்று சிக்ஸர்களை விளாசி 22 ரன்கள் சேர்த்து டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் நிலைத்திருந்தார். 20 ஓவர்களில், பெங்களூர் அணி 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது.
197 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ஹாசில்வுட், திரிபாதியை 5 ரன்னில் மற்றும் கேப்டன் ருத்துராஜை டக் அவுட்டில் அவுட் ஆக்கினார். தொடர்ந்து, தீபக் ஹூடா மற்றும் சாம் கரனும் விரைவில் வெளியேறினர். பிறகு வந்த வீரர்களும் ரன்களை சீராக சேர்க்க முடியாமல் திணறினர். ரச்சின் ரவீந்திரா மட்டுமே அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களின் முடிவில், சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்துள்ளது. மேலும், 17 ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.