பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்! - மனு பாகர் படைத்த சாதனை..

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் ஆகும்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் 22 வயதான மனு பாகர், வெண்கலம் வென்று அசத்தி இருந்தார். இந்தச் சூழலில் அடுத்த 48 மணி நேரத்துக்குளாக இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாகர் படைத்துள்ளார். மேலும் பி.வி.சிந்துவுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாகர் - ஷரோஜோத் சிங் இணை பங்கேற்றது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டதில், 16-10 என முன்னிலை பெற்று மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது. இதனையடுத்து நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்றுகொடுத்த மனு பாகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மனு பாகர் - ஷரோப்ஜோத் இணைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து சரோப்ஜோத் சிங்கூறியதாவது, “மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இந்த ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆன போதும் இதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எங்கள் மீது அழுத்தம் அதிகம் இருந்தது” என்று தெரிவித்தார்.
இதேபோல் 2 பதக்கங்கள் வென்றது குறித்து மனு பாகர், “நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அனைவரது அன்புக்கும், ஆசிக்கும் நன்றி. நமது கையில் இருப்பதை தான் கட்டுப்படுத்த முடியும். இங்கு வருவதற்கு முன்னர் அப்பாவுடன் பேசி இருந்தேன். இறுதி ஷாட் வரை போராடலாம் என்பது தான் திட்டம்” என்று தெரிவித்தார்.