அடுத்தடுத்து அவுட் ஆன பேட்ஸ்மேன்கள்....இந்திய அணி திணறல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமை தாங்குகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் உள்ளார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாத நிலையில், முதல் போட்டிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் டக் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த படிக்கல்லும் ரன் எதுவும் இன்றி வெளியேறினார். கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், விராட் கோலி 05 ரன்களிலும், ஜுரேல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் வெளியேறினர். இந்தியா 39 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.