பாரலிம்பிக்ஸில் இந்தியா புதிய சாதனை.. தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்..

 
பாராலிம்பிக்ஸ் - மாரியப்பன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.  

மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக்  போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலிருந்தும் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன. அந்தவகையில் இந்தியா சார்பாக 84 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  


தொடர்ந்து  பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாரலிம்பிக்ஸில் தங்கப் பதக்கமும், 2020ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியிருந்தார். பாரலிம்பிக்ஸில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையை மாரியப்பன் படைத்துள்ளார். 

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 20 பதக்கங்களை  வென்றுள்ளது. அதேபோல் பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தமிழ்நாடு வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் மற்றும் தற்போது மாரியப்பன்  ஆகியோர் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.