விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி! பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த முறை சாம்பின்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் Aவிலும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் குரூப் Bயிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி, 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 100 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.