இந்தியா அபாரம்! நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.