சுப்மன் கில் அபாரம்! வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!

சாம்பியன் டிராபி தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறை சாம்பின்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் Aவிலும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் குரூப் Bயிலும் இடம்பெற்றுள்ளன. முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், இதில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபடமாக சுப்மன் கில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.