பட்லர் அபார ஆட்டம்! பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்!

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 14வது லீக் போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்து பெங்களூரு அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக பட்லர் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.