உலகக்கோப்பை கிரிக்கெட்- இலங்கையை பந்தாடி அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா

 
உலகக்கோப்பை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை  அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Image


உலகக் கோப்பை தொடரின் 33 வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கில் உடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கில் 92 ரன்களிலும்,கோலி 88 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன்பிறகு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடினார். துரதிஷ்டவசமாக அவரும் 82 ரன்களில் ஆட்டம் இழந்தார்.50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்களை எடுத்திருந்தது.

Image

358 எடுத்தால் வெற்றி என்ற  கடின இலக்குடன் ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரிலே பதுன் நிசங்காவை வீழ்த்தினார் பும்ரா.அதன் பிறகு வந்த 3 முக்கிய பேட்ஸ்மன்கள் அடுத்தடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்து வீச வந்த சமி தன் பங்கிற்கு மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை சுருட்டினார்.19.4 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்தது. ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சமி ஆட்டநாயகன் விருது வென்றார்.


இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகக் கோப்பையில் இந்திய அணி அசத்தல்! இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள்! இது விடாமுயற்சியின் வெளிப்பாடாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.