காமன்வெல்த் போட்டிகள் எப்போது தொடங்குகிறது?, எதில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ

 
common wealth

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் போட்டி எப்போது தொடங்குகிறது ? எதில் பார்க்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் இன்று இரவு, இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்குகிறது.  தொடக்க விழாவுடன் நடக்கவுள்ள இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாடுகளின் அணிவகுப்பு நடக்கிறது. அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க விழாவில் சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

common wealth

முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்க விழாவில் பேட்மின்டன் வீராங்கனை சிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்கிறார்.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவை SONY LIV நேரடி ஒளிபரப்பு செய்கிறது.