டெல்லியை தெறிக்கவிட்ட சென்னை பேட்ஸ்மேன்கள் - 224 ரன்கள் இலக்கு!

 
CSK

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் 223 ரன்கள் குவித்துள்ளது.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லப்போகும் அணிகள் எது என்பது இதுவரை தெரியவில்லை. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த மூன்று இடத்திற்கு கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டிவிட்டு வெளியேறினார். அவர் 9 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே  87 ரன்னில் அவுட் ஆனார்.  இறுதியில் ஜடேஜா அதிரடி காட்டவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.