96 ஆண்டுகளுக்குப் பிறகு... அர்ஜென்டினா - ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை!

 
ச்

1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் உருகுவே மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதியிருந்தன. அதன்பிறகு 96 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பானிஷ் மொழி பேசும் இரண்டு உலக நாடுகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல்முறையாகும் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறும் நிலையில், அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகளில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் யூரோ 2024 சாம்பியன் ஸ்பெயின் அணிகள், உலகக் கோப்பை மகுடத்தை கைப்பற்றும் இறுதிப்போட்டியில் இன்று அமெரிக்காவின் நியூயார்க்/நியூ ஜெர்சி மைதானத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி ஜூலை 20 அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த உலக சாம்பியன் யார்?

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் ஸ்பெயின் களமிறங்குகிறது. மறுபுறம், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டத்தை வென்று தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

அர்ஜென்டினாவின் போராட்ட வெற்றி

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பத்தில் பின்தங்கிய அர்ஜென்டினா, அதன்பிறகு சிறப்பாக மீண்டு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. என்சோ பெர்னாண்டஸ் சமநிலை கோலை அடித்த நிலையில், கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் லவுடாரோ மார்ட்டினஸ் வெற்றி கோலை பதிவு செய்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 1966-க்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அடைய வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு முடிவுக்கு வந்தது.

அசத்திய ஸ்பெயின்

மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லமின் யமால் பெற்றுத் தந்த பெனால்டியை மிகேல் ஒயர்சாபல் கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். பின்னர் டானி ஒல்மோ உருவாக்கிய தாக்குதலை பெட்ரோ பொரோ கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தார்.
பிரான்ஸ் இறுதிவரை போராடிய போதிலும், ஸ்பெயினின் வலுவான தற்காப்பு ஆட்டம் அவர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தது. இந்த தொடரில் ஏழு போட்டிகளில் ஆறாவது முறையாக 'க்ளீன் ஷீட்' பதிவு செய்த ஸ்பெயின், தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.

பயிற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, "இரு அணிகளும் திறமை, தரம் மற்றும் தாக்குதல் பாணியில் ஒத்த அணிகள். ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கால்பந்தை வழங்கும் சிறந்த போட்டியாக இது அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா பயிற்சியாளர் லயனல் ஸ்கலோனி, "இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியையும் அணுகுவது போலவே முழுமையான திட்டத்துடன் தயாராகியுள்ளோம். எதிரணியின் பலம், பலவீனங்களை ஆராய்ந்துள்ளோம். எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராடுவோம்" என்று கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது

ஒருபுறம் நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, மறுபுறம் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின். இரு வலுவான அணிகள் நேருக்கு நேர் மோதுவதால், இந்த இறுதிப்போட்டி உலக கால்பந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.