கொக்கைன் போதைப் பொருளுக்கு அடிமையானேன் - வாசிம் அக்ரம் அதிர்ச்சி தகவல்

 
wasim akram

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தான் கொக்கைன் போதைப் பொருளுக்கு அடிமையானதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அளவில் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளங்கியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். நேர்த்தியான யார்க்கர் வீசுவது, பந்தை ஸ்விங் செய்வது என பல்வேறு திறமைகளை கொண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டியில் 414 விக்கெட்டுகளையும் , 356 ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.  1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல இவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. 

wasim

பிறகு 1993 முதல் 1999ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் விளையாடிய பாகிஸ்தான் அணி 1999ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.இந்நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த வாசிம் அக்ரம் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், அதற்கு பிந்தைய நிகழ்வு குறித்தும் பேசினார். அப்போது பேசிய வாசிம் அக்ரம் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையானதாக கூறினார். ஆனால் சிறிது காலத்தில் அந்த பழக்கத்தில் இருந்து வெளிவந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் ஜாம்பவனாக விளங்கி வந்த வாசிம் அக்ரம் தான் கொக்கைன் போதைபொருளுக்கு அடிமையாகி இருந்ததாக கூறிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.