கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுகிறோம் - விராட் வருத்தம்

 
virat

எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என விராட் கோலி உருக்கமாக கூறி உள்ளார்.

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஓவலில் நேற்று நடைபெற்ற  2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் எடுத்தார்.


 இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி  16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  


தோல்வியடைந்தது குறித்து டுவிட்டரில் விராட் கோலி கூறியதாவது:- எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது. ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என்றார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.