இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? : நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

 
NZvsPAK

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.  

இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்த்ய நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்று இறுதிபோட்டிக்கு நுழைய முயற்சிக்கும். இதேபோல் பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது. இருப்பினும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.