ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் - சூர்யகுமார் யாதவ் 3வது இடத்திற்கு முன்னேற்றம்

 
suryakumar yadav

நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளுக்கு 71 ரன்கள் விளாசினார். இதேபோல் கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பந்துவீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்தது. 

ind vs aus

இதனிடையே நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பட்டுத்திய சூர்யகுமார் யாதவ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர்  ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி  (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர். அதே போல் டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சாகிப் அல் ஹசன் (வங்காள தேசம்) உள்ளார்.