இரட்டை சதம் அடிப்பேன் என நினைக்கவே இல்லை - சுப்மன் கில் பேட்டி

 
Gill

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இரட்டை சதம் அடிப்பேன் என நினைக்கவே இல்லை என சுப்மன் கில் கூறியுள்ளார். 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் ரோகித் சிறப்பான தொடக்கம் தந்தாலும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 8 ரன்னில் ஆட்டமிழக்க இஷான் கிசன் 5 ரன்களில்  ஆட்டமிழந்தார். ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழ, மறுபுறம் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அற்புதமாக ஆடிய அவர், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 200 ரன்களை கடந்தார். தனிப்பட்ட முறையில் 200 அடிக்கும் ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். மேலும் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அற்புதமாக ஆடிய அவர் 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது.

Subman Gill

349 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நியூஸிலாந்து பேட்ஸ்மனான பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை செஞ்சுரி போட்ட முதல் வீரர் என்ற சிறப்பை சுப்மான் கில் பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 1999-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

இது குறித்து சுப்மன் கில் கூறியதாவது: இரட்டை சதம் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை, ஆனால் 47-வது ஓவரில் சிக்ஸர்கள் அடித்த போது என்னால் அந்த இலக்கை அடைய முடியும் என்ற எண்ணம் தோன்றியது. இஷான் கிஷன் ஒரு சிறந்த பார்ட்னர். அவர் இரட்டை சதம் விளாசிய போது நான் அங்கு இருந்தேன். அணிக்கு நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னிடம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. இவ்வாறு கூறினார்.