பாலியல் புகார் - இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கைது

 
dhanush

டேட்டிங் செயலி மூலம் பழகி 29 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மனாக விளங்கி வரும் தனுஷ்க குணதிலக அந்த அணிக்காக 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சிறப்பான திறமையின் காரணமாக இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டதால் அவர் அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். அணியில் இருந்து விலகிய போதிலும் அவர் சொந்த நாட்டுக்கு திரும்பாமல், இலங்கை அணியுடனே பயணித்து வந்தார். நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் இன்று காலை இலங்கை அணி நாடு திரும்பிய நிலையில்,  தனுஷ்க குணதிலக சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார்.  கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர்.