டி20 உலக கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

 
SA

டி20 உலக கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

sa

இந்நிலையில் இன்று காலை தொடங்கிய சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூசோவ் 56 பந்துகளுக்கு 109 ரன்களும், டி காக் 63 ரன்களும் எடுத்தனர். 

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக அந்த அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்ரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தென் ஆப்ரிக்க அணிக்கு முதல் வெற்றியாகும்.