தோனியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

 
Shikar dhawan

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசிய ஷிகர் தவான், ஆசியாவுக்கு வெளியே அடிக்கப்பட்ட அதிகபட்ச அரைசதங்களில் தோனியின் சாதனையை  சமன் செய்துள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால் போட்டி 36 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டக்வொர்த் முறைப்படி அதே 36 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி  26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 58 ரன்களும், சுப்மன் கில் 98 ரன்களும்(நாட் அவுட்) சேர்த்தனர். 

dhoni

இந்நிலையில், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த ஷிகர் தவான் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது ஆசியாவிற்கு வெளியே தோனி 29 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், ஷிகர் தவான் நேற்றைய போட்டியில் தனது 29 அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆசியாவிற்கு வெளியே அதிகபட்ச அரைசதங்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில், விராட் கோலி 49 அரைசதங்களுடன் முதல் இடத்திலும், சச்சின் 48 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும், 42 அரைசதங்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலும், ரோகித் சர்மா (36) 4வது இடத்திலும் உள்ளனர்.