கப்திலை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு சென்ற ரோகித் சர்மா

 
rohit sharma

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

rohit virat

இப்போட்டியில் 64 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா முன்னதாக 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளினார். ரோகித் சர்மா இதுவரை 129 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,443 ரன்கள் எடுத்துள்ளார். 3,399 ரன்களுடன் நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் 2-வது இடத்திலும், 3,308 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளனர்.