கபடி ரசிகர்கள் அதிர்ச்சி! காயம் காரணமாக பவன் ஷெராவத் விலகல்

 
pawan

காயம் காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் மீதமுள்ள புரோ கபடி லீக் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

12 அணிகள் பங்கேற்கும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. பவன் குஜராத் வீரரை பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே மடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர். பவன் ஷெராவத்தின் காயம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார், பவன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமாடுவார் என்றும், அணியின் வீரர்களுடன் தொடர்பில் இருக்கிறார் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறார் என்று கூறி நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிலையில்,  பவன் ஷெராவத் ப்ரோ கபடி சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. காயத்தால் அவதியடைந்து வந்த பவன் ஷெராவத்திற்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள புரோ கபடி தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.