இறுதிப் போட்டிக்கு யார் வந்தாலும் கோப்பை எங்களுக்கு தான் - பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

 
babar azam

இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதாவது, சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Babar azam

இந்நிலையில், இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் உங்களுடன் மோதுவது இந்தியாவாக இருந்தால் அந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாபர் அசாம், இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது. எந்த அணி வந்தாலும் அதை வெல்ல 100 சதவீதம் முயற்சிப்போம். நாங்கள் எப்போதும் சவால்களை சமாளிக்க முயற்சி செய்கிறோம். இறுதிப் போட்டியில் அழுத்தம் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஒரு தொடரில் பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதிப் போட்டிக்குள் நுழைகிறோம். அப்படி இறுதிப் போட்டிக்கு வரும்போது அச்சமில்லாமல் விளையாட முயற்சிப்பது அவசியமானதாகிறது. இவ்வாறு கூறினார்.