காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு

 
NZWvsRSAW

காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவித்துள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.  அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுஸி பேட்ஸ் 91 ரன்களும், ஷோபி டெவைன் 48 ரன்களும் சேர்த்தனர். இதேபோல் அமேலியா கேர் 20 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்ரிக்கா அணியில் நொங்குலுலேகா மிலாபா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது.